BREAKING NEWS

Category 5

Category 6

Category 7

Friday, May 9, 2014

ஜல்லிக்கட்டுக்குத்தடை! பாரத பாரம்பரியத்தை அழிக்கும் பன்னாட்டு சதி!

ஜல்லிக்கட்டுக்குத்தடை!
பாரத பாரம்பரியத்தை அழிக்கும் பன்னாட்டு சதி!

பிராணி வதைத் தடுப்புச் சங்கம் ஜல்லிக்கட்டுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தொடுத்த வழக்கில் ஜல்லிக்கட்டு நடத்தத் தடை ஆணை பிறப்பிக்கப்பட்டது துரதிருஷ்டவசமானது. ஜல்லிக்கட்டில் காளைகள் துன்புறுத்தப்படுவதாக பிராணி வதைத் தடுப்புச் சங்கம் வாதிட்டது ஒரு நாடகம் என்பது உண்மை!
நமது நாட்டின் பாரம்பரியத்தை சிதைக்க பன்னாட்டு என்.ஜி.ஓ. அமைப்பினர் பல வழிகளை கையாண்டு வருகிறார்கள். உதாரணமாக பட்டாசுக்கு எதிரான பிரச்சாரம், வழக்கு முதலானவைகளை எடுத்துக்கொள்ளலாம். முதலில் குழந்தைத் தொழிலாளர்கள் என்றும், ஒலி, காற்று மாசு என்றும், அதன்பிறகு பட்டாசுக்கு செலவிடும் காசை நல்ல செயலுக்கு பயன்படுத்தலாமே என்று பசப்புகிறார்கள். இவர்களுக்கு சில அறிவுஜீவிகளும் ஒத்து ஊதினர். வறட்சி மாவட்டங்களில் மக்களின் வாழ்வாதாரமாகவும், குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை பரவசப்படுத்திடும் ஒரு நாள் கொண்டாடப்படும் தீபாவளியை சீர்குலைக்கவும் இந்த சதி என்பதை இந்து முன்னணி தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறது.
அதுபோல, ஜல்லிக்கட்டு என்பது நமது நாட்டின் பெருமைமிகு காளைகளை பாதுகாத்து வருகிறது. இளைஞர்களிடம் வீரத்தை ஏற்படுத்தி வருகிறது. சிலரின் தவறான வழிமுறையால் காளைகள் துன்புறுத்தப்படுகிறது என்பதைத் தடுக்க முறைப்படுத்துவதை விடுத்து ஜல்லிக்கட்டை தடுப்பது சரியான செயலா என்பதை நடுநிலையாளர்கள் சிந்திக்க வேண்டும். ஜல்லிக்கட்டு என்பது திருக்கோயில் திருவிழாவை முன்னிட்டு வருடத்திற்கு ஒருமுறையோ, இருமுறையோ நடத்தப்படுகிறது. குதிரை பந்தயமோ மாதந்தோறும் நடத்தப்படுகிறது. அதிலும் குதிரைகள் துன்புறுத்தப்படுகிறது. ஆனால் அதை தடை செய்ய ஏன் வலியுறுத்தவில்லை. அது சூதாட்டம்! மிருக வதை! ஏன் அதைத் தடுக்க பிராணி வதைத் தடுப்புச் சங்கம் நடவடிக்கை எடுக்கவில்லை?!
தினசரி நூற்றுக்கணக்கான லாரிகளில் புளிமூட்டைப்போல காளைகளையும், பசுக்களையும் கன்றுக்களையும் உயிரோடு கொன்று கசாப்பிற்கு எடுத்துச் செல்லும் கொடுமையை எதிர்த்து பிராணி வதைத் தடுப்புச் சங்கம் வழக்குத் தொடுத்துள்ளதா? அதை ஏன் முழுமையாகத் தடுக்க முற்படவில்லை? இவர்களது நோக்கம் பிராணி வதையா அல்லது பாரம்பரியத்தை அழிப்பதா?
அதுமட்டுமல்ல ஜல்லிக்கட்டிற்காக வளர்க்கப்படும் நமது நாட்டின் காளைகள் கசாப்பிற்கு விற்கப்பட்டு அழிக்கப்படவே இந்தத் தடை உதவும். இதன் மூலம் நாட்டு மாடுகள் இல்லாத நிலைக்குத் தள்ளப்படும் அபாயத்தை உணரவேண்டும்.  நமது நாட்டில் தாவரங்கள், பறவைகள், விலங்குகள், பாரம்பரிய இடங்கள் எல்லாம் நமது வழிபாடு, விழாக்கள், பண்டிகைகள், நம்பிக்கைகள் முதலாவற்றோடு பிணைத்திருப்பதால் காக்கப்படுகின்றன.
இவ்விஷயத்தில் மாநில அரசு மக்களின் உணர்வுகளுக்கும், தமிழக பராம்பரியத்திற்கும் மதிப்பளித்து ஜல்லிக்கட்டிற்கு விதிக்கப்பட்ட தடையை விலக்கவும், தகுந்த விதிமுறைகளை வகுத்து முறையாக திருவிழாக்கள் நடைபெறவும், ஜல்லிக்கட்டு தொடர்ந்து நடத்திடவும் வழிகாண வேண்டும் என்று இந்து முன்னணி கேட்டுக்கொள்கிறது.

என்றும் தேசிய, தெய்வீகப் பணியில்

(இராம கோபாலன்)

Post a Comment

 
Copyright © 2013 கலக்கக்குரல்
Shared by WpCoderX